Wednesday, March 7, 2012

மிகப் பெரிய கலைக் குற்றம்


மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் 10 அடி உயரத்தில் இரண்டு மூங்கில் கம்புகளுக்கு இடையே அந்தரத்தில் கயிற்றை கட்டி வித்தை காட்டும் கலைக் கூத்தாடிகளை பார்த்திருப்பீர்கள். இதையே மிக பெரிய அளவில் கற்பனை செய்து பாருங்கள். 10 அடி உயரத்திற்கு பதிலாக 1,368 அடி உயரம், மூங்கில் கம்புகளுக்குப் பதிலாக இரட்டைக் கோபுரத்தை (தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட அதே அமெரிக்க இரட்டை கோபுரம் தான்) பயன்படுத்தினார்.

கலைக்கூத்தாடிகளின் சர்வதேச அடையாளம்தான் பிலிப் பெட்டி என்பவர். எங்கேயாவது உயரமாக எதையாவது பார்த்தால் போதும் உடனே ஓடிப்போய் கயிறு கட்டி அதன்மேல் நடக்க தொடங்கிவிடுவார். பிலிப் 1949ல் பிரான்சில் பிறந்தவர். மற்றவர்கள் தரையில் நின்று செய்யத்தயங்கும் பல விஷயங்களை அனாயசமாக கயிற்றில் நின்று கொண்டு செய்வார். இரட்டை கோபுரங்களுக்கு இடையே கம்பி கம்பி கட்டி நடந்ததுதான் இவரின் சாதனைகளில் உச்சம்.

ஒரு புத்தகத்தில் உலகிலேயே உயரமான கட்டிடம் இரட்டை கோபுரம்தான் என்பதை படித்துவிட்டார். ஒரே உயரத்தில் அருகருகே இரண்டு கட்டிடங்கள் இருப்பது பிலிப்புக்கு வசதியாகி போய்விட்டது. உடனே எப்படியாவது அதன் இடையே கம்பி கட்டி நடக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

இரட்டை கோபுரத்தின் உயரத்திற்கு நினைத்தபடி போய்விட முடியாது. அங்கு ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. அதையெல்லாம் மீறி சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி 6 வருடங்கள் பாடாதபாடு பட்டார். இரட்டை கோபுர கட்டிடங்களின் உயரம் 1,368 அடி. இரண்டுக்கும் இடைவெளி 140 அடி. இரண்டு கட்டிடங்களையும் இணைக்க நூற்றுக்கணக்கான கிலோ எடையில் கம்பி வேண்டும். கடுமையான பாதுகாப்பு மிகுந்த அந்த இடத்தில் அவ்வளவு உயரத்திற்கு எப்படி இத்தனை எடையையும் போலிஸ் கண்ணில் மண்ணைத் தூவி எடுத்துச் செல்வது ? இது நடக்கவே நடக்காது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், கடும் முயற்சி எடுத்து யாருக்கும் தெரியாமல் கம்பி போன்ற சாதனங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு தனது சாதனையை பிலிப் நிகழ்த்திக் காட்டினார்.

1974 -ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ந்தேதி  காலை 7.15 மணிக்கு இரட்டை கோபுரங்களுக்கு இடையே கம்பியை கட்டி நடந்தார். 140 அடி தூரத்தை கம்பி மேல் நடந்து கடக்க சுமார் 45 நிமிடம் பிடித்தது. முறைப்படி அனுமதி பெற்று இந்த சாதனையை செய்யவே ஏகப்பட்டவர்களின் உதவி வேண்டும். ஆனால், தனி ஆளாக யாருக்கும் தெரியாமல் இந்த சாகசத்தை நிகழ்த்தி முடித்தவுடன் பிலிப்பை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்து. "இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கலைக்குற்றம்" என்று இதை அமெரிக்கா சொன்னது.

பிலிப் பெட்டியின் திட்டமிடலும் இந்த சாகசமும் "மேன் ஆன் ஒயர்" என்ற பெயரில் டாக்குமெண்டரி படமாக வெளிவந்து ஆஸ்கர் விருதையும் பெற்றது.  

1 comment:

Vetrimagal said...

This is a new information for me. Thanks for writing about this interestingly.