Saturday, February 5, 2011

இளமையில் வேண்டும் இலக்கணம்!


லக்கணம் என்றாலே பல மாணவர்களுக்குக் கணக்குப் பாடம் போல் கசக்கிறது. வேம்பு கசக்கும். கசப்பாக இருந்தாலும் அதுதான் அனேக நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறது.

இலக்கணமும் அது போலத்தான். படிப்பதற்குக் கடினமாக இருந்தாலும், அதுதான் மொழியின் அடிப்படையான எழுத்து முதல் வாழ்க்கை வரை எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிகளை கற்றுத் தருகிறது.

இலக்கணம் என்பதற்கு, 'மொழியின் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள். அந்த விதிகளைக் கூறும் நூல்' என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி.
சிலரைப் பார்த்து, 'அவர் இலக்கணப் பிழையில்லாமல் எழுதுவார், பேசுவார்' என்று சொல்வதைக் கேட்கிறோம். 'அப்படியா!' என்று அவரை ஒரு புறம் புருவங்களை உயர்த்தியும், இன்னொரு புறம் உள்ளுக்குள் அன்பு பொங்கவும் பார்க்கிறோம். அப்படிப் பார்ப்பதற்கு என்ன காரணம்? அவரிடம், விதிகளைக் கடைப்பிடித்துக் கட்டுப்பாடோடு வாழ்கின்ற வாழ்க்கை இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளைக் கற்றுத் தருவதுதான் இலக்கணம்.

தமிழ் மொழி மட்டும்தான் மொழியின் இலக் கணத்தோடு, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்திருக்கிற உன்னத மொழி. அதனால்தான் `செம்மொழி' என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும், வாழ்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது. இளமை மிக அற்புதமானது. எதிர்காலத் திட்டங்களுடன் வாழ்பவர்கள் என்றைக்கும் இளமையுடன் இருக்கிறார்கள்.

அத்தகைய இளமைக் குள் இருக்கும் இனிய இளையோரே... உங்களின் இந்தப் பருவம் பெரும்பாலும் மாணவப் பருவமாகவே இருக்கும். அதுவும் கல்வி கற்கும் பருவமாக இருக்கும்.

ஊதியம் பெற விரும்பும் கல்வியை விட, உயிர் வாழ உதவும் கல்வியே உயர்ந்தது. அத்தகைய கல்வியைப் பெறுகிறபோது இலக் கணத்தைப் போல கட்டுப்பாடுகளையும் வரையறை செய்து கொள்ள வேண்டும். இலக்கணத்துக்குள் வரும் எடுத்துக்காட்டுகளைப் போல சிலரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார், 'எப்படி வாழ வேண்டும் என்று அறிய விரும்பினால் காந்தியடிகள் எழுதிய சத்தியசோதனையைப் படியுங்கள். எப்படி வாழக் கூடாது என்று அறிய விரும்பினால் நான் எழுதிய வனவாசத்தைப் படியுங்கள்.'

காந்தியடிகள் வாழ்ந்த வாழ்க்கை இலக்கண வாழ்க்கை.
கண்ணதாசன் வாழ்ந்த வாழ்க்கை இலக்கணம் மீறிய வாழ்க்கை.


கண்ணதாசனே ஒரு கவிதையில்...
முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டு
ரத்தம் கெட்டுப் போனதொரு காலம்
ரத்தம் கெட்டுப் போன பிறகு
வந்தது இந்த ஞானம்

என்பார். நீங்களும் பின்னர் வருந்தக்கூடாது என்பதற்குத்தான் இளமையில் கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

அன்பான இளையோரே! கைவிளக்கைப் போன்றது கல்வி. கல்விதான் அகல் விளக்கு, வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். அதைக் கொண்டு வெற்றியின் விலாசத்தைத் தேடலாம். அதற்குத் தேவை, அனுசரித்துப் போவதுதான். சூழ்நிலைக்குத் தகுந்தபடி நீங்கள் அனுசரித்துப் போகும்போது சமுதாயத்தில் வரவேற்கத்தக்க மனிதராவீர்கள். அனுசரித்தல் என்பது அடங்கியிருத்தல்தான். அடிமை அல்ல. அதனால்தான் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொன்ன வள்ளுவரும், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்றார். அதாவது உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் என்கிறார்.

உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள். அதனால் அவர்கள் ஏணிப்படிகள். அந்த ஆசிரியர்கள் தங்களின் ஞானதீபத்தால் மாணவர்கள் அனைவருக்கும் வழிகாட்டுகின்றனர். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். சிலரோ தடுமாறி, தடம் மாறி விடுகிறார்கள். என்ன காரணம்? மாணவர்களின் இலக்கணத்தைக் கற்காததும், கற்ற பின்னர் கடைப்பிடிக்காததும்தான். அது என்ன மாணவர் இலக்கணம் என்கிறீர்களா?

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் இலக்கணம். அதில் மாணவர்களின் இலக்கணம், வகுப்பறையில் பாடத்தை எப்படிக் கற்பது, மாணவர்களின் வகை எத்தனை என்பதையெல்லாம் விதிகளாக வகுத்துள்ளார். அவற்றைக் கடைப்பிடிக்கிறபோது முதுமையிலும் செழுமையாக, செம்மையாக வாழ்வு சிறக்கும். குறிப்பாக மூன்று வகையான மாணவர்களைப் பட்டியலிடுகின்றார் அவர்.

அன்னத்தையும், பசுவையும் போன்றோர் முதல் மாணவர்கள். அன்னம், பாலையும், நீரையும் பிரித்துப் பாலை மட்டுமே பருகும். முதல் மாணவர்கள், கேட்பதில் நல்லதையும், கெட்டதையும் பிரித்து நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வர். பசு, புல் இருக்கும் இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்து பின்பு நிதானமாக அசைபோடும். அதுபோல் கேட்டதை, படித்ததை நிதானமாகச் சிந்திப்பார்கள்.

மண்ணையும், கிளியையும் போன்று இருப்பவர்கள் இடை மாணவர்கள். மண்ணில் உழவர் எந்த அளவுக்குப் பாடுபடுகிறாரோ, அந்த அளவுக்கு விளைச்சல் தரும். கிளி தனக்குச் சொல்லிக் கொடுத்த சொல்லையன்றி வேறு ஒன்றையும் சொல்லாது. அதுபோல் இடை மாணவன் தனக்குக் கற்பிக்கப்பட்டதையன்றி வேறு ஒன்றையும் அறிந்துகொள்ள மாட்டான்.

ஓட்டைக்குடம், பன்னாடை போன்று இருப்பவர்கள் கடை மாணவர்கள். ஓட்டைக்குடம், ஊற்றிய நீரை ஒழுகவிட்டு விடும். கடை மாணவன், தனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதை மறந்து விடுவான்.

பன்னாடை வடிகட்டும்போது தேனை விட்டு கசடுகளை மட்டுமே வைத்துக்கொள்ளும். அதுபோல் கடை மாணவனும் நல்லவற்றை விட்டுவிட்டு, தேவையில்லாதவற்றை மனதில் சேர்த்துக்கொள்வான்.

அன்னம்- பசு, மண்- கிளி, ஓட்டைக்குடம்- பன்னாடை இவை எடுத்துக் காட்டுகள். இவற்றுள் நீங்கள் எதைப் பின்பற்றப் போகிறீர்கள்? எந்த வகை மாணவராக இருக்கப் போகிறீர்கள்? இதைத்தான் இலக்கணம் எடுத்துக் காட்டுகிறது.

இப்போது இளஞ்செடிகள் நீங்கள். செடிகளுக்குத் தண்ணீரும், உரமும் இட்டு வளர்ப்பார்கள். நன்றாக வளரும். அத்துடன் சுற்றியும் வேலியும் அமைப்பார்கள். அதுதான் அதற்குக் கவசம். இலக்கணமும் ஒரு வகையில் வேலிதான். அந்த வேலி இளமைக்கும் வேண்டும்.

காந்தியடிகளின் வாழ்க்கை, இலக்கண வாழ்க்கை என்று குறிப்பிட்டேன். ஒருமுறை காந்தியவாதியும் கோடீஸ்வரருமான சேக் ஜம்னாலால் பஜாஜின் மூத்த புதல்வர் கமலநயன், படிப்புக்காக இங்கிலாந்து செல்லும்முன் காந்தியடிகளிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றார். அன்று காந்தியடிகளுக்கு மவுன தினம். எனவே, ஒரு காகிதத்தில் காந்தியடிகள் தமது ஆசியைத் தெரிவித்தார்.

சிரஞ்சீவி கமல், - வார்தா 3.6.1935

1. குறைவாகப் பேசு.
2. எல்லோர் சொல்வதையும் கேள். எது சரியோ அதைச் செய்.
3. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காதே. குறிப்பிட்ட காரியத்தை
குறிப்பிட்ட காலத்தில் செய்.
4. ஏழையைப் போல் வாழ். பணக்காரன் என்று பெருமைப்படாதே.
5. செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்.
6. கருத்தோடு படி.
7. தினந்தோறும் முறையாக உடற்பயிற்சி செய்.
8. உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு.
9. நாட்குறிப்பு எழுது.
10. புத்திசாலித்தனத்தை விட இருதய பலமே கோடி மடங்கு பெரிது. தினந்தோறும் முறையாக இரண்டு முறை பிரார்த்தனை செய்.
11. உனக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டால் வேறு பெண்ணைக் கண்ணெடுத்தும் பாராதே.
12. ஒவ்வொரு வாரமும் நீ செய்யும் காரியங்களைக் குறித்து எனக்குக் கடிதம் எழுது.


பாபுவின் ஆசீர்வாதம்.

என்று எழுதினார்.

மகாத்மாவின் இந்தக் கடித வரிகள், இளமைக்கு வேண்டிய இலக்கண வரிகள். உயர்ந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தன்மயமாக்குதலே கல்வியாகும். சிந்திக்காத மூளை, துருப்பிடித்த இரும்பு.

சிந்திக்காத மனம், பாசி படர்ந்த குட்டை. எதற்கும் உதவாமல் போகும். உங்கள் சிந்தனை யின் துணை கொண்டு கேட்டதை, பார்த்ததை, படித்ததைச் சிந்தித்துப் பாருங்கள். எதையும் நுணுகி ஆராய்ந்து தெளிந்த பின்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு ஏற்றம் பெறும். இலக்கணம்தான் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றது.

தடம் மாறாமல் இருக்கச் சொல்கிறது. தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள். மகத்தான தடங்களைப் பின்பற்றுங்கள். நீங்களும் மாமனிதர்தான்.

No comments: