Monday, December 12, 2011

தோழர் L.G கீதானந்தனுக்கு அஞ்சலி

இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கம்யூனிச பேரியக்கத்தின் தூண்களில் ஒன்று இன்று சரிந்துவிட்டது. ஆம்! சிறந்த மேடை பேச்சாளரும், மார்க்சிச தத்துவ ஞானியுமான தோழர் L.G என அன்போடு அழைக்கப்படும் L.G கீதானந்தன் அவர்கள் கோவையில் இன்று காலமானார். கடந்த சில வருடங்களாக சிறு நீரக கோளாறு என்னும் கொடிய நோயினால் தோழர் பாதிக்கப்பட்டிருந்தார்.

1967களில் M.L. இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய தோழர் L.G, 70ன் பிற்பகுதியில் தோழர் கல்யாண சுந்தரத்தின் முயற்சியால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் தொண்டாற்றினார். தோழர் அவர்களின் கடின உழைப்பும் அரசியல் ஞானமும் அவரைக் கட்சியில் கோவை மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்ந்து சேவையாற்ற காலம் பணித்தது.

இலங்கையில் ஈழ விடுதலை போராட்டம் முனைப்படைந்திருந்த சமயங்களில் அந்த போராட்டம் பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருந்த தமிழக தலைவர்களில் தோழர் L.G முக்கியமானவர். தோழர் பத்மநாபாவை ஈழத்தின் சரியான அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்ட தமிழக தோழர்களில் ஒருவர் L.G என்ற பெருமை எமக்கு எப்போதும் உண்டு. தோழர்.பத்மநாபாவின் நினைவு மலரில் '20 ஆண்டு காலம் ஈழ விடுதலை போரில் தன்னை அர்பணித்து கொண்ட தோழர் நாபாவின் வரலாறு நம் இதயத்தில் நிரம்பி வழிகிறது. ஒரு புரட்சிகர தலைமைக்கேற்ற கொள்கையும், நடைமுறையும் கொண்டிருந்தார் அவர்' என்று L.G. அவர்கள் கூறியிருந்தார்.  

1987 களில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போதும், அதன் தொடர்ச்சியாக ஈபிஆர்எல்எப் தோற்றுவித்த வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கம் அமைந்த போதும் அதற்கு ஆதரவாக பல்வேறு அரங்கங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்று முக்கியத்துவம் உடையது. தோழர் நாபாவின் படுகொலை தமிழகத்தில் நடந்த போது அந்த நிகழ்வையும், புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்த தமிழக தலைவர்களில் தோழர் L.G. மிக முக்கியமானவர்.

தோழர் L.G.யின் அரசியல் வகுப்புகள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் எல்லாம் மானுட விடுதலையை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாகும். தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் மனச்சோர்வடைந்திருந்த எமது தோழர்களுக்கு L.G. யின் தோழமை நிறைந்த ஆதரவு எம்மால் காலத்தாலும் மறக்கப்பட முடியாதது. 

ஒரு மகத்தான அரசியல் ஞானியை, நல்ல தோழனை இழந்து வாடும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஈழ மக்கள் சார்பில் எமது அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சென்னை


Download As a PDF

0 comments: